இஸ்லாமிய கவிதை இலக்கியம்

Wednesday

அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்களின் அழகிய வரலாற்றை எடுத்துரைக்கும் "அர் ரஹீக் அல் மக்தூம்" எனும் நூலில் நான் படித்து ரசித்த இரண்டு கவிதைகளை தங்களோடு பகிர்ந்துகொள்ள விளைகின்றேன்.

ஹிஜ்ரி 4 ஸஃபர் மாதத்தில் நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி காரா வமிசத்தினரின் வேண்டுகோளுக்கிணங்கி இஸ்லாத்தைக் கற்றுக்கொடுக்கச் சென்ற ஸஹாபாத் தோழர்களை இடைமறிக்கும் லஹ்யான் கிளையினர் குபைப் (றழி) அவர்களைக் கழுவிலேற்றப் போகும் தறுவாயில் அன்னார் பாடிய கவிதை(யின் தமிழாக்கம்) வருமாறு:


"எதிரி இராணுவத்தினர் என்னைச் சூழ்ந்தனர்
தங்கள் இனத்தவரை எனக்கெதிராக ஒன்றிணைத்தனர்
ஒவ்வொரு சாதியையும் வருமாறு அழைத்தனர்
தங்களின் பெண்கள், பிள்ளைகள் என அனைவரையும் இணைத்தனர்
ஒரு நீண்ட உறுதிமிக்க கழுமரத்திற்கருகில் நான் நிறுத்தப்பட்டேன்
எனது கஷ்டம், தனிமை, அந்நியம்
மேலும் நான் இறக்குமிடத்தில் சூழ்ந்துள்ள இராணுவம்
இவையனைத்தையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன்
இறைவனை நான் நிராகரிக்கவேண்டுமென பெரிதும் விரும்பினர்
(எங்ஙனம் அதனைச் செய்வேன்?)
மரணம் எனக்கு அதைவிட மிக எளிது
என் கண்கள் அழுகின்றன, நீர் ஓட இடமில்லை
எனக்கிழைத்த துன்பத்தைத் தாங்க
அர்ஷின் அதிபதி எனக்குப் பொறுமையளித்தான்
அணு அணுவாக அவர்கள் என்னைக் கொல்கின்றனர்
எனக்கு மோசமான உணவு வழங்கப்பட்டது
நான் முஸ்லிமாகக் கொலையுறுவதால் 
மரணம் ஒரு பொருட்டல்லவே!
எந்தப் பகுதியில் கொலையுண்டாலும்
அல்லாஹ்வின் பாதையில் என் மரணம் துயில் கொள்ளுமே!
அது, அல்லாஹ் நாடினால் துண்டு துண்டான
சதைகளின் நாள, நரம்புகளிலெல்லாம் அருள்வளம் பொழிவான்.' (அர் ரஹீக் அல் மக்தூம் பக்.355-356)


அபூகரீப், பக்ராம் வதைமுகாம்களில் சித்திவதைகளை அனுபவித்துவரும் நமது இளைஞர் யுவதிகளுக்கு இந்தக் கவிதை எவ்வளவு பெரிய ஆதர்ஷமாய் அமையமுடியும்!


அடுத்தது, அதே நூலில் பக். 371 இல் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அஹ்ஸாப் யுத்தத்தின்போது அகழி தோண்டியவாறு அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவின் பின்வரும் கவிதையை மீண்டும் மீண்டும் பாடியதாக ஸஹீஸ் புகாரியை ஆதாரமாகக் காட்டிக் குறிப்பிடப்பட்டுள்ளது:

"அல்லாஹ்வே! நீ இல்லையென்றால்
நாங்கள் நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்,
தர்மம் செய்திருக்க மாட்டோம்,
தொழுதும் இருக்க மாட்டோம்.
எங்கள் மீது நீ அருள் பொழிவாயாக!
எதிரிகளை நாங்கள் சந்திக்கும் போது
பாதங்களை நிலைபெறச் செய்வாயாக!
இவர்கள் (குறைஷிகள்) எங்கள் மீது
அக்கிரமம் புரிந்துள்ளார்கள் - இவர்கள்
எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால்
அதற்கு நாங்கள் இடம்தர மாட்டோம்."


இவ்வாறாக, இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் கவிதை இலக்கியத்துக்கு மிக நீண்ட பாரம்பரியமொன்று இருந்தே வருகின்றது. போராட்ட நிலங்களில் அதன் வல்லமை துப்பாக்கி முனையை விட சக்திவாய்ந்தது. வாள்முனையை விடக் கூர்மையானது
 

Browse