மனித உள்ளம்

Sunday

மனித உள்ளம் எப்பொழுதும் அதற்குரிய இச்சைகளை அடைந்துவிடுவதிலேயே விருப்பமாய் இருக்கும். அது எப்போதும் தனக்கு களைப்பையும் சிரமத்தையும் தரக்கூடிய பொறுப்புக்களிலிருந்து விரண்டோடும் தன்மை கொண்டது. அல்லது தனது இச்சைகளை திருப்திப்படுத்தக்கூடிய ஏதாவதொன்றைப் பெற்றுத்தரகின்ற செயற்பாடுகளாக இல்லாதபோது அந்த செயற்பாடுகளைச் செய்ய முன்வரமாட்டாது.

எனவேதான் மனித உள்ளம் எப்பொழுதும் இபாதத்துகள் செய்வதனை பாரமாகக் கருதுகின்றது. அவனது உள்ளத்தில் ஈமான் நுழைகின்றபோது இந்நிலையிலிருந்து அவனது உள்ளம் உயர்ந்துவிடும். அப்படி உயர்ந்துவிட்டால் அவனது மனோ இச்சையோடு போராடி அவன் வெற்றி பெறுவான். அப்போது அவனது உள்ளம் அவனது கட்டுப்பாட்டிற்குள்ளால் காணப்படும். அவன் ஏவுகின்றவற்றை அது செய்யும். ஆனால் இத்தோடு அவனுக்கும் அவனது உள்ளத்திற்கும் இடையிலான போராட்டம் நின்றுவிட மாட்டாது. அதற்கப்பாலும் அவனது உள்ளம் அவனோடு போராடும்.

அவன் செய்கின்ற நல்ல செயற்பாடுகளை மக்கள் முன்னால் வெளிக்காட்டி அதற்காக அவன் புகழப்பட வேண்டும், கண்ணிப்படுத்தப்பட வேண்டும் என்று அவனது உள்ளம் அவனுடன் போராடும். இது மனோ  இச்சைக்கு மிகவும் விருப்பமான ஒரு விடயமாகும்.

இதற்குரிய சந்தர்ப்பம் அதற்கு வழங்கப்படாவிட்டால் அவனுக்குள்ளாலேயே அவனது செயற்பாட்டை பெரிதாகக் காட்டி அவனைப் பெருமிதம் கொள்ளச் செய்யும். அதனால் பிறரை விட தான் உயார்ந்தவன் என்று அவன் நினைக்கத் தலைப்படுவான். இவை அனைத்தும் அல்லாஹ்வை விட்டும் அவனைத் தூரமாக்கும். அவனுடைய செயற்பாடுகளுக்குரிய பிரயோசனத்தை பெற்றுத்தராது தடுக்கும். ஏனெனில் அவன் இதன் மூலம் மறைவான இணை வைத்தலில் வீழ்ந்து விடுகின்றான். இது மிக ஆபத்தான இணை வைப்பாகும்.
 

Browse