திட்டமிட்டால் வெற்றி உறுதி

Thursday
ஓய்வின்றி உழைப்பதால் மட்டுமே ஒருவர் வாழ்வில் முன்னேறிவிடுவதில்லை. அந்த உழைப்பின் பயன் வெளிப்பட ஓர் அரண் வேண்டும். 'திட்டமிடல்' என்பதுதான் அந்த அரண்!

'வாழ்வில் வெற்றி பெற்றவர்களைப் பாருங்கள்! அவர்கள் ஓய்வின்றி உழைத்தவர்களாகவே இருப்பார்கள்'.

இப்படி ஒரு கருத்தை நாம் எல்லோருமே கேட்டிருக்கிறோம்இ இதில் ஏதேனும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்புள்ளதா? இல்லை: 'உழைப்பவர்களே உயர்ந்தவர்கள்' என்ற கருத்தில்’ என்ன வேறுபாடு சொல்லமுடியும்? ஆனால்இ இந்தச் சொற்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் சொல்லில் வராத செய்தி ஒன்று புதைந்திருக்கிறது! என்னவென்று ஊகிக்க முடிகிறதா உங்களால்?


செக்கு மாட்டிற்கும் வண்டி மாட்டிற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமையைக் கேட்டால் எதைச் சொல்வீர்கள்? இரண்டு மாடுகளும் நடந்து கொண்டே இருக்கின்றன; இது ஒற்றுமை. என்ன நடந்தாலும் செக்கு மாடு இருக்கும் இடத்தை விட்டு ஓர் அடிகூட முன்னேறுவதில்லை: ஆனால் வண்டிமாடு கிளம்பின இடமும் போய்ச் சேரும் இடமும் வெவ்வேறு. இது வேற்றுமை.


நடந்துகொண்டே இருப்பதாலேயே முன்னேறிக் கொண்டு இருக்கிறோம் என்பது பொருளில்லை. உடற்பயிற்சிக் கூடங்களிலும், உடல் தகுதி காணும் சில மருத்துவமனைகளிலும், ஒரு நடைக்கருவி வைத்திருப்பதை நீங்கள் கண்டிருக்கக்கூடும். சிலர் அதில் நடப்பார்கள். சிலர் வேகமாக மூச்சிரைக்க, வேர்வை வழிய ஓடுவார்கள். ஆனால் ஓர் அங்குலம்கூட முன்னே செல்ல மாட்டார்கள்.

இது உடற்பயிற்சிக்குப் பொருந்தும். வாழ்க்கைக்குப் பொருந்துமா? நடப்பதன் நோக்கமே ஓர் இடம் விட்டு வேறு இடம் போக வேண்டும் என்பதுதானே? 'இங்கிருந்து கிளம்புகிறேன்; இந்த இடத்தை அடைவேன்' என்ற தெளிவுடன் நடப்பவனே குறித்த இடத்தை விரைவில் அடைகிறான். தெருத் தெருவாக நடந்து கொண்டே இருந்தால் பயன் உண்டா? 'பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர்போய்ச் சேராது' என்றார் கண்ணதாசன்.

இது உழைப்புக்கும் பொருந்தும். ஓய்வின்றி உழைப்பதால் மட்டுமே ஒருவர் வாழ்வில் முன்னேறிவிடுவதில்லை. அந்த உழைப்பின் பயன் வெளிப்பட ஓர் அரண் வேண்டும். 'திட்டமிடல்' என்பதுதான் அந்த அரண்!

உழைப்பின்றி 'இப்படிச் செய்ய வேண்டும்: அப்படிச் செய்யவேண்டும் என்பவர்களை 'வாய்ச்சவடால்' பேர்வழி என்கிறோம். 'ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டியதைப்போல' என்ற பழமொழியும் இவர்களைக் குறிக்கிறது. உழைப் பில்லாத திட்டமிடல் வெறும் வீண் பேச்சுதான். ஆனால் திட்டமிடாத உழைப்பு...?

'விழலுக்கு இறைத்த நீர்' என்ற பழமொழி இந்தக் கருத்தையே வலியுறுத்துகிறது. நீர் இறைப்பது என்பது கடினமான உழைப்புதான். ஆனால்இ இறைக்கும் நீர் எங்கே போய்ச் சேர வேண்டுமோ அதை நோக்கிப் பாய வேண்டும். இல்லா விட்டால் நீரை இறைத்துத்தான் என்ன பயன்?

திட்டமிடுதலும், செயல் படுதலும் இணைந்தால்தான் வெற்றியின் வாசல் தென்படுகிறது. நாட்டின் எதிர்காலம் குறித்துத் திட்டமிடுவதற்கு ஆணையம் வைத்திருக்கிறது அரசு. திட்டமிடல் என்பதுதான் வேர். செயல்படல் என்பது கிளைபரப்பி தளிர் விட்டு மலர் தருவது! வேரின்றி அமையாது மரம்!

ஓர் இராணுவத்திற்கு வெற்றி எதிரிகளைத் தாக்குதலால் மட்டும் வருவதில்லை: தாக்குதல் நடத்தப் போகும் நேரத்தையும், முறைகளையும், வேகத்தையும் திட்டமிட்டுக் கொண்டு களத்தில் இறங்கினால்தான் வெற்றி சாத்தியமாகிறது. தேர்வுக்குப் படிக்கும் மாணவன் தொடங்கி, பெரும் நிறுவனம் நடத்தும் முதலாளி வரை திட்டமிட்டு செயல்படுபவரே வெற்றி பெறுகிறார்கள்.


ஒருமுறை தோற்றவர், மறுமுறை வெல்வதற்கான முதற்காரணம் எப்போதும் திட்டமிடுதலாகவே இருக்கிறது. இமய மலையின் எவரெஸ்ட் சிகரத்தை முதலில் ஏறி சாதனை புரிந்தவர் எட்மண்ட் ஹிலாரி என்னும் செய்தி எல்லோருக்கும் தெரியும்: ஆனால், பலருக்குத் தெரியாத செய்தி ஒன்றுண்டு. அவர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று விடவில்லை என்பதே அது.

மலையேற முடியாமல் திரும்பிய போதுஇ எட்மண்ட் ஹிலாரி சொன்ன சொற்கள் மிக உயர்ந்தவை. எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி அவர் சொன்னார்: 'உன்னை நான் கண்டிப்பாக வெல்வேன்; உன் சிகரத்தில் நான் கால் பதிப்பது உறுதி. காரணம், உனக்கு இதற்கு மேல் வளர்ச்சியில்லை. அது நிர்ணயம் செய்யப்பட்டு விட்டது. ஆனால், நான் இன்னும் முயல்வேன், வளர்வேன்.'

மலையேறுதல் என்னும் அவரது செயலில் மாற்றம் ஏதுமில்லை. ஆனால் கடுமையான பயிற்சி உட்பட அனைத்தும் திட்டமிட்டு செயல்பட்டபோது அந்த செயலுக்குரிய பலன் எட்மண்ட் ஹிலாரிக்கு கிடைத்து விட்டது.


உலகத்தையே வெல்வதற்கு வழி சொல்லவில்லையா நம் வள்ளுவன்?

'ஞாலம் கருதினும் கைகூடும்; காலம்

கருதி இடத்தால் செயின்.'

செயல்பட வேண்டிய காலத்தையும், செயல்பட வேண்டிய இடத்தையும் திட்டமிட்டுக் கொண்டு செயல்படுபவர்கள் எதைப் பெற விரும்புகிறார்களோ அதைப் பெற்றுவிடுகிறார்கள்!


'திட்டமிடல்' என்பதும் வறட்டுத்தனமாக இருந்து பயனில்லை. அறிவினாலும், அனுபவத்தினாலும் தீட்டப்பட்டதாக அது இருக்க வேண்டும். வள்ளுவனே அதற்கும் வழிகாட்டி விடுகிறான்.


' வினைவலியும்இ தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்.'


செய்ய விரும்பும் செயலின் தன்மையையும் அதைச் செய்து முடிக்கத்தேவையான ஆற்றலையும் முதலில் அறிந்து கொள்ளல்; செயலை செய்து முடிப்பதற்கான ஆற்றல் தன்னிடம் ஏற்கனவே உள்ளதா- இல்லை, இன்னும் பெருக்கிக்கொள்ள வேண்டுமா என்பதை உணர்ந்து கொள்ளல்.


செயலை நாம் செய்து முடிக்க நமக்குச் சவாலாக இருப்பவர் எவர் என்றும் அவரது ஆற்றலின் அளவு என்ன என்றும் தெரிந்து கொள்ளல்; அவருக்குத் துணையாக எவரேனும் வருவரா என்பதையும் வருபவரின் ஆற்றல் என்ன என்பதையும் ஆய்ந்து கொள்ளல்; நமக்குத் துணையாக செயல்பட எவரேனும் உள்ளனரா என்பதையும் அவரின் ஆற்றலையும் புரிந்து கொள்ளல்!


எச்செயலை செய்வதற்கும் திட்டமிடல் என்பது அளவுக்கு கூர்மைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்பதை விளக்கவே வள்ளுவன் இவ்வாறு அடுக்கிக்கொண்டு செல்கிறான்.


'ஒரு மரத்தை வெட்டுவதற்கு 45 மணித் துளிகள் நேரம் தந்தால், அதில் முதல் 40 மணித் துளிகளை ஆயுதத்தைக் கூர்மைப்படுத்தவே செலவிட வேண்டும்' என்ற முதுமொழியைக் கேட்டிருக்கிறீர்களா?

'30 நிமிட மேடைப்பேச்சை 5 நிமிடங்களில் நான் தயாரித்து விடுவேன். ஆனால் 5 நிமிட மேடைப்பேச்சினை தயாரிக்க எனக்கு 30 நிமிடங்கள் வேண்டும்' என்றார் மிகச் சிறந்த பேச்சாளரான சர்ச்சில்.

மிகச்சரியாகவும் கூர்மையாகவும் திட்டமிடுதலே சிக்கல்கள் வராமல் தடுக்கின்றன; எதிர்பாராமல் நேர்ந்துவிட்ட சிக்கல்களிலிருந்து தப்பிக்கவும் வைக்கின்றன.


'வாழ்க்கை ஒரு மிக மோசமான ஆசிரியர்' என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பாடம் நடத்தி, தேர்வு வைத்து அதில் தேர்ச்சியடைய வில்லை என்றால், ஆசிரியர் தண்டனை தருவார். வாழ்க்கையோ முதலில் தேர்வு நடத்தி, தண்டனை வழங்கிவிட்டு அதிலிருந்து ஒரு பாடத்தை நமக்குக் கற்றுத் தருகிறது.

திட்டமிட்டு படிக்காத மாணவனுக்கு ஆசிரியர் தண்டனை தருகிறார். திட்டமிட்டு செயல்படாதவனுக்கு வாழ்க்கையே தண்டனை யாகி விடுகிறது.


'வாழ்க்கை என்பது போராட்டமா? பூந்தோட்டமா? என்ற தலைப்பில் பட்டி மன்றங்கள்கூட நடத்தப்படுகின்றன. விடை மிக எளிதானது. வாழ்க்கையைப் போராட்டமாக எடுத்துக்கொண்டு திட்டமிட்டு செயல்படுபவர்களுக்கு அது பூந்தோட்டமாக விரிகிறது. பூந்தோட்டமாக எண்ணி அமர்ந்திருப்பவர்களுக்கு அது என்றும் போராட்டமாகவே இருக்கிறது.

மலர்ப் பாதையாக வாழ்க்கை எப்போதுமே இருப்பதில்லை. அப்படி இருந்தாலும் அது சலிப்பினைத் தந்துவிடும்.

அடங்காத அலைகள் நிறைந்த கடலைப் போல எதிர்பாராத ஏற்றங்களும் இறக்கங்களும் வளைவுகளும் நிறைந்ததுதான் வாழ்க்கை. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். அமைதியான கடல் என்றுமே திறமையான மாலுமியை உருவாக்குவதில்லை.

ஆர்ப்பரிக்கும் கடலை எதிர்கொண்டு செல்பவனே சிறந்த மாலுமியாக வளர்ச்சி யடைகிறான். திட்டமிட்டு செயல்படுபவனே வாழ்வின் ஏற்ற இறக்கங்களை மீறி வெற்றி பெறக் கற்றுக்கொள்கிறான்.

திட்டமிடுவது என்பது மிகப்பெரிய வேலை என்றும், நம்மால் அது முடியாது என்றும் எண்ணத் தேவையில்லை. எல்லோருக்குமே திட்டமிடல் என்பது ஓரளவுக்கு இயல்பாகவே இருக்கத்தான் செய்கிறது.

காலையில் உடற்பயிற்சிக்கோ அல்லது நடைப்பயிற்சிக்கோ நாம் அணியும் உடை வேறு. வீட்டில் ஓய்வாக இருக்கும்போது அணியும் உடை வேறு. ஒரு நேர்காணலுக்கோ, கல்லூரிக்கோ அல்லது அலுவல் தொடர்பாகவோ வெளியே செல்லும்போது அணியும் உடை வேறு. மறந்தும் கூட ஓரிடத்து உடையைப் பிற இடத்துக்கு நாம் அணிவதில்லை. பழக்கத்தில் நமக்குள் குடியேறி விட்ட ஒரு சிறு அளவிலான திட்டமிடல்தான் அது.


நம்முடைய ஒவ்வொரு சொல்லும் அதை விரிவுபடுத்திக் கொள்ளவேண்டும் அவ்வளவுதான்.

சற்று முனைப்பு இருந்தால் இந்த பழக்கம் எளிதில் கைகூடும். வெற்றி இலக்கும் எளிதாகும்.

'தன்மனத்தே நினைந்து செய்யும் கொடுமையால் அனந்தாள்' என்று கைகேயியைக் கம்பன் குறிப்பதுபோலஇ திட்டமிட்டே கெடுதல் செய்பவர்கள் உண்டென்றால்இ நம்மால் திட்டமிட்டு நற்செயல்கள் செய்யமுடியாதா என்ன?

வாழ்க்கையைப் போராட்டமாக எடுத்துக்கொண்டு திட்டமிட்டு செயல்படுபவர்களுக்கு அது பூந்தோட்டமாக விரிகிறது. பூந்தோட்டமாக எண்ணி அமர்ந்திருப்பவர்களுக்கு அது என்றும் போராட்டமாகவே இருக்கிறது.

0 comments:

 

Browse