மனித வாழ்வு

Wednesday

(நீ விருப்புடன் வாசிக்க வேண்டுமென்பதனால் சுருக்கமாகவும் பந்தியாகவும் தரப்பட்டுள்ளது. கவனமாக சிந்தித்து நிதானமாக வாசித்து அறிந்துகொள் பலன் பெறுவாய்)
இவ்வுலகில் வாழும் மக்களிடையே பல்வேறு வகையான, மாறுபட்ட கொள்கைகள் காணப்படுகின்றதனை நாம் அவதானிக்கின்றோம். இவர்கள் யாவரும் தங்கள் அறிவின் தரத்திற்கு ஏற்றவாறு தமது கொள்கைகளை வகுத்துக் கொண்டு தமது வாழ்நாளை வாழ்வதும் பின்பு மாய்வதுமாக இந்தக் காலத்தினை செலவு செய்கின்றனர். இவ்வுலகில் வாழ்கின்ற மக்கள் எவரும் தமது கொள்கைகள் பின்பற்றப்படுவதற்கு தகுதியற்ற ஒன்று அல்லது பிழையானது, அவ்வளவு பொய்யானது  என அறிந்து கொண்டு அதனை பின்பற்றவில்லை.
இவ்வுலகில் வாழ்கின்ற மக்கள் கொள்கை விளக்கங்களில் எத்தனையோ பேதங்களையும், பெறுமதிகளையும் கொண்டிருப்பினும் அவை ஏதாவதொரு வகையில் இரு மூலக்கொள்கைகளின் அடிப்படையாகத்தான் அமைகின்றது என்பது எனது அறிவாகும். இவ்விரு கொள்கைகளையும் சாதாரண அறிவுடன் அவதானிப்பவர்களுக்கு ஒன்றுடன் ஒன்று முறன் எனத் தோன்றினாலும் தத்துவார்த்த நோக்கில் அதன் நோக்கம், முடிவு ஒன்றாகத்தான் அமைந்து விடுகின்றது என்பதனை நாம் மறுக்கவியலாது.
எல்லோரும் கூறுவது போன்று இவ்வுலகில் உயிருள்ள பொருட்கள் மட்டும்தான் இயங்க முடியுமா? அல்லது உயிருள்ளவைதான் இயங்குகின்றனவா? என நோக்கினால் முடிவு வேறாகத்தான் காணப்படுகின்றது. பிரபஞ்சத்தில் காணப்படுகின்ற இறைவனுடைய படைப்புக்கள் யாவும் இயக்கமுடையனவாகத்தான் அமைந்துள்ளன. இன்னும் எமது அறிவில் நாம் உயிரற்றது அல்லது சடப்பொருட்கள் என அறிகின்ற பொருட்கள் கூட இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அதனை அறிந்துகொள்ள எமது அறிவுதான் முடங்கிக் கிடக்கின்றது.
இவைகளில் இருந்து இரு உண்மைகள் எமக்கு புலப்படுகின்றன. அதாவது இவ்வாறு இயங்கும் பொருட்கள் ஒன்றில் விரைவாகவோ அல்லது காலதாமதமாகவோ செயலாற்றுகின்றன என்பதனை நாம் மறுக்க முடியாது. அதேபோன்று இயங்கும் பொருள் சரிவர இயங்கினாலும், பிழையாக இயங்கினாலும் (சரி, பிழை என்பது முடங்கிக்கிடக்கும் உனது அறிவுக்குத்தான் என்பதனை நீ உணர்ந்துகொள்) செயல்படும் விதத்திற்கு ஒரு குறிக்கோள் அல்லது நோக்கம் இருந்ததாகவேண்டும் என்பது மறைக்க முடியாத ஒன்றாகும்.
இவ்வுண்மையினையே எமது வழிகாட்டியாக காணப்படுகின்ற அல்-குர்ஆன் மற்றும் நபிகளார் (ஸல்) அவர்களினுடைய போதனைகள் 'செயல்கள் யாவும் எண்ணத்தினை பொறுத்து அமைபவை' (இன்னமல் அஹ்மாலு பின்-நிய்யத்) எனக் குறிப்பிடுகின்றது.
எனவே, பொருள் எதுவாக இருப்பினும், அதன் இயக்கம் எவையாக அமையினும் ஏதோவொரு நோக்கில்தான் தத்தமது அறிவிற்கும், இயல்பிற்கும் ஏற்றபடி செயல்படுகின்றன என்பதனை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இங்கு நோக்கம், குறிக்கோள் ஏதோ ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான்.
உலகில் உள்ள படைப்பினங்கள் ஒவ்வொன்றும் தம்முடைய தேவை எதுவென தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் கூட ஏதோ ஒன்றை பெற்றுக்கொள்ள அல்லது தாம் அடைந்திருக்கின்ற இவ்வாழ்வை நிறைவு செய்துகொள்ள அல்லது பூரணப்படுத்தவே பிறக்கின்றன.
அவ்வாறெனில், மனிதன் ஏன் பிறக்கின்றான்? அவன் ஏன் செயலில் ஈடுபடுகின்றான்? அவனின் நோக்கம்தான் என்ன? போன்ற கேள்விகளுக்கு நாம் கூறும் விளக்கம்தான் என்ன. இவ்வுலகில் மனிதன் தனது யதார்த்த நிலையான சாந்தியை நிலை நாட்டவே பிறக்கின்றான். அவனின் செயல்கள் அவனின் நோக்கினை அடிப்படையாக கொண்டமைந்தவை. மனிதனுடைய நோக்கம் அவனுடைய ஆரம்ப நிலையான சாந்தியை அடைவதாகும். இவ்வாழ்வில் நல்லவன், கெட்டவன் அனைவரும் இதற்காகவே வாழ்க்கையுடன் போராடுகின்றானர்.
இங்கு நாம் கருத்திற்கொள்ள வேண்டிய விடயம், மனிதன் தவிர்ந்த ஏனைய படைப்பினங்கள் தம்முடைய குறிக்கோள்களை அடைவதற்காக எந்த வழியை எடுத்துக் கொண்டு இயங்க முற்படினும், அவைகளுக்கிடையில் தங்கள் நோக்கம் தொடர்பில் வெற்றி தோல்விகளை கணிக்கும் சுபாவமோ, போராட்டமோ, கட்சிப் பற்றோ கிடையவே கிடையாது. வெறும் இலை குழைகளை உண்டு வாழும் ஆட்டிற்கும், புல்லை மட்டும் உண்டு வாழ்கின்ற ஆட்டிற்கும் இடையில் எந்த கட்சிப் பற்றோ, கருத்து வேறுபாடுகளோ அல்லது போராட்டங்களோ கிடையவே கிடையாது.
ஆனால் மனித இனம் மட்டும் எந்த நாட்டவனாக இருப்பினும் சரி, எந்த இனத்தவனாக இருப்பினும் சரி ஒரு வகுப்பாரின் கொள்கையை, நடைமுறையை மறு வகுப்பாளர்கள் பிழையாகவே காண்கின்றார்கள். இதற்கு எந்த குழுவினரும் விதிவிலக்கல்ல. ஒருவரின் கொள்கையை மற்றயவர் குறை கூறுகின்றனர். மற்றயவர்கள் குறை கூறினால் செற்போர் அல்லது மற்போர் இடம்பெறத் தொடங்குகின்றது.
'எனினும், தங்களுடைய மார்க்க காரியங்களில் பல பிரிவுகளாகப் பிரிந்துகொண்டு, ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடம் உள்ள பிரிவைக் கொண்டு சந்தோசமடைகின்றனா.(அல்-முஃமின்: 53)
என்றாலும், அவ்வாறு கட்சிப்பற்றுடனும், கொள்கை விளக்கங்களுடனும் சரியென்றும் பிழையென்றும் கூறுகின்ற கொள்கைகளோடும் இவ்வுலக மக்களின் செயல்படும் குறிக்கோள்தான் அல்லது நோக்கம்தான் என்ன?
அறிந்தும் அறியாமலும் தத்தமது நோக்கத்தை புரிந்து கொண்டும், புரிந்து கொள்ளாமலும் செயல்படுகின்ற எல்லா மனிதர்களுமே பூரணத்தன்மையினை அடைவார்களா? அவ்வாறாயின் நோக்கை பெற்றுக்கொண்ட மனிதர்கள் உண்டா? அதற்கான வழிவகைகள்தான் என்ன?
இஸ்லாம் என கூறுகின்ற சாந்தி, கட்டுப்படுதல் என்பன உலக விடயங்களை மட்டும் பொறுத்தவையல்ல. உலக விடயத்திலேனும் ஓரளவு சாந்தியை மனிதன் பெற விரும்பினாலும் சாந்தி கிட்டுவதாக இல்லை. அவ்வாறு கிடைப்பினும் அவை பூரணமானதாக இருப்பது கிடையாது. பசி எடுக்கின்றது உணவினை உட்கொண்டால் சாந்தி கிடைக்கின்றது. ஆனால் சில மணி நேரங்களின் பின்பு உணவு தேவைப்படுகின்றது. இவ்வாறு நாம் மற்றய எமது காரியங்களையும் சிந்தித்து உணரலாம். இவை யாவும் வெறும் சந்தர்ப்ப சாந்தி மட்டுமே. எனவே நாம் சந்தர்ப்ப சாந்தி ஒன்றை பெற்றுக்கொள்ள கையாளும் ஒவ்வொரு செயலும் நோக்கமுடையதாய் இருப்பதனால் நிறைவான சாந்தியென்பது வேறு ஒரு இடமாகத்தான் இருக்க வேண்டும் என்பதும் உலக விடயங்கள், விவகாரங்கள் அதற்கான வழியே என்பதும் எமக்கு புலனாகின்றது.
இதனை நாம் அறிவின் மூலமே உணர்ந்து கொள்ள முடியும். அறிவானது அது கிட்டும் விடயப் பொருள் சார்ந்தது. இதனால் சாந்தி என்பது அதனுடன் ஒன்றியதாகும். அறிவு நிச்சயம் உண்மையின் பக்கமுடையது. எனவே ஈமான் என்பது இந்த பூரண சாந்தியை பெறவல்ல அறிவினை பெறுவதே. இதனை பெற்றுக்கொண்டவர்களே இவ்வுலகில் தோன்றிய நபிமார்களும், றசூல்மார்களும் அவர்களை பின்தொடர்ந்த நல்லடியார்களும். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் அறியாமையின் காரணமாக வழி தவறி குருட்டுத்தனமான வழியில் சென்றுகொண்டிருக்கும் போதும், தாங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவே நம்பியிருக்கின்றார்கள்.
இறுதியாக நபி (ஸல்) அவர்களினால் இலகுபடுத்தி தரப்பட்ட வழிக்கு பெயர்தான் இஸ்லாம். முந்திய நபிமார்கள் மறைந்த பின்பு எவ்வாறெல்லாம் மார்க்கம் உண்மை புரட்டப்பட்டு பொய்கள் மக்கள் மத்தியில் உண்மையென்று நம்பக்கூடியதாய் ஒரு சாரரினால் வழிகாட்டப்பட்டதோ அதேபோன்று, எமது றசூல் (ஸல்) அவர்கள் மறைந்த பின்பும் ஒரு சாரர் உண்மையை புரட்டி பொய்யை மக்கள் உண்மையென்று நம்பக்கூடிய விதமாக உபாயங்களை கையாண்டு வந்திருக்கின்றார்கள் என்பதனை நாம் மறுப்பதற்கில்லை.
 

Browse