என்ன தியாகம்? எதற்கு இந்த திருநாள்?

Tuesday
12 September 2016

#குத்பா பிரசங்கம்#

முஸ்லிம்கள் என்பவர்கள் 'இறைவனுக்கு கட்டுப்பட்டவர்கள்'. இறைவனது கட்டளை எதுவித கோணல்களுமின்றி ஏற்று நடப்பவர்களே முஸ்லிம்களாக இருக்க முடியும்.

இத்திருநாளின் நோக்கமும் அதுதான். இத்திருநாள் 'தியாகத் திருநாள்' என பெயர் பெற்றது இறை தூதர் இப்றாஹிம் (ஆபிரகாம்) அவர்களின் வாழ்க்கையின் உன்னதங்களையும், இறைவன் மீதான அவரின்  கட்டுப்படுதலையும் இவ்வுலகில் காலம் முடிவுறும் வரையில்  நினைவில் நிறுத்தவாகும்.

இறைவன் மீது தூதர் இப்றாஹீம் அவர்கள் கொண்டிருந்த கட்டுப்படுதலையும், கீழ்ப் பணிதலையும் அவருடை வாழ்க்கை குறிப்புக்களில் ஏராளம் அவதானிக்கலாம்.

இறைதூதர் இப்றாஹிம் அவர்களின் இரு மனைவியரில் ஒருவர்தான் அன்னை ஹஜறா அவர்கள். இவர்கள் இருவருக்கும் பிறந்த புத்திரரே (அலை) இஸ்மாயில் (இஸ்மாவேல்) அவர்கள். புத்திரரான இஸ்மாயில் பாலகனாக இருந்த வேளை அவரையும் அன்னை ஹாஜறாவினையும் பக்கா என்கின்ற பாலைவன தேசத்தில் கூட்டிச் சென்று விட்டும்படி இறைவனின் கட்டளை தூதர் இப்றாஹிமுக்கு வந்தது.

இறைதூதர் அக்கட்டளையினை அப்படியே ஏற்றார். இறைவன் மீது எத்தகைய கேள்விகளையோ, சந்தேகங்களையோ அவர் விடுக்கவில்லை. அங்கு கூட்டிச் சென்று விட்டு வந்தவுடனும், அது இறை கட்டளை என்பதனால் அன்னை ஹஜறாவும் அவ்விடமே தான் மரணிக்கும் வரையில் தனது வாழ்நாளை தன்மகனிடன் கழித்தார்.

இங்கு இறைவனின் கட்டளைக்கு இறைதூதர் இப்றாஹீம் அவர்கள் கட்டுப்பட்டு நடந்தார்கள். தன் கணவனான இறைதூதர் இப்றாஹிமின் கட்டளைக்கு அன்னை ஹாஜறா அவர்கள் கட்டுப்பட்டு நடந்தார்கள். இஸ்லாமி வாழ்க்கை நெறியை  சுமப்பதில் கணவன் மனைவிக்கிடையில் எத்தகைய உறவு நிலை காணப்படவேண்டும், அவர்கள் எப்போது இறைவனின் திருப்தியை பெறலாம் என்பதே இங்கு படிப்பினைக்குரியது.

நபி இஸ்மாயில் (அலை) அவர்கள் பின்னர் பக்காவிலேயே வளர்கின்றார்கள். திருமணமும் செய்து கொள்கின்றார். பின்னரான காலத்தில் தூதர் இப்றாஹிம் அவர்கள் நபி இஸ்மாயில் அவர்களின் வீட்டுக்கு செல்கின்றார்கள். நபி இஸ்மாயில் அவர்கள் வீட்டில் இருக்கவில்லை. இருப்பினும் நபி இஸ்மாயில் அவர்களின் மனைவி தூதர் இப்றாஹிம் அவர்களை அதிருப்தியான வகையில் உபசரிக்கின்றார். தூதர் இப்றாஹிம் அவர்கள் நபி இஸ்மாயில் அவர்களின் மனைவியிடம் "வீட்டு வாசல் படியினை மாற்றிக்கொள்ளுமாறு" நபி இஸ்மாயிலுக்கு செய்தியை வைத்துவிட்டு அவ்விடம் அகலுகன்றார்கள்.

நபி இஸ்மாயில் அவர்கள் வீடு வந்ததும் இச்செய்தியை அவரின் மனைவி கூறுகின்றார். உடனே நபி இஸ்மாயில் அவர்கள் 'உன்னை பிரியுமாறு தன் தந்தை எனை பணித்துள்ளார்கள்' எனக் கூறி அக்கட்டளைக்கு கீழ்ப்படிந்தார்கள்.

ஒரு திருமண பந்தத்தில் பெற்றோரின் அபிலாசைகள் முக்கியத்துவம் வாய்ந்தது. பிள்ளைகள் திருமண பந்தத்திலும், குடும்ப வாழ்விலும் பெற்றோரின் அலோசனைகளுக்கு கீழ்ப்படிந்து தமது விருப்பு வெறுப்புக்களில் தியாகம் மேற்கொள்ள வேண்டும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகின்றது.

எனவே முஸ்லிமின் வாழ்விலும் முன்னேற்றத்திலும் கணவனுக்கும் மனைவிக்கும், தாய்க்கும் சேய்க்கும், தந்தைக்கும் புத்திரனுக்கும் இடையான உறவும், கீழ்ப்டிதலும் எந்நிலையில் இறை திருப்தியை பெறுகின்றது என்பது இங்கு உணரப்பட வேண்டியது. குடும்ப வாழ்வும், சகவாழ்வும் விட்டுக்கொடுப்பிலும், புரிந்துணர்விலும் பிறக்கின்றது என்பதும், புரிந்துணர்வு தியாகத்தில்தான் உண்டாகும் என்பதும் நபிகளார் இப்றாஹிம் அவர்களின் வாழ்க்கை நெறியில் கற்றுக்கொள்ளப்பட வேண்டியன.

பெருநாள் குத்பா

Monday
06 July 2016

இன்று இடம்பெற்ற பெருநாள் குத்பாவானது ஊரிலுள்ள சிலருக்கு உறைக்கும்படியாக இருந்திருக்க வேண்டும். மார்க்கத்தினை பயன்படுத்தி மக்களை மயக்குபவர்களுக்கும், மார்க்க போதனைகளை கூறி மக்களை திசை திருப்புபவர்களும், மக்கள் நலன் பேசும் வீராப்பு பயல்களும் இக்குத்பாவினை கேட்டிருக்க வேண்டும்.

குத்பாவின் கரு இறைவன் முன்னிலையில் உண்மையான வெற்றியாளர்கள் யார் என்பதாகும்.  ஈமான்கொண்டு, சாலிகான நற்காரியங்களை மேற்கொண்டு, சமூகநலண்கள் பேணுபவர்களே வெற்றியாளர்கள் என்பது இஸ்லாத்தின் போதனை. எத்தனை நல்லமல்கள் செய்தாலும், அவற்றை புரிகின்றோம் என்ற அகம்பாவத்தில் அலைபவர்களின் உள்ளங்கள் அசுத்தக் கிடங்காகும். எனவே இத்தகை அடையல் நிரம்பிய உள்ளங்களால் சமூகநலன் என்பது வெறும் சுயநலனே என்பதாக குத்பா விபரித்தது. 

சமூகநலன் என்பதன் தாட்பர்யம் நன்மையை ஏவி தீமையை தடுப்பதாகும். நன்மை புரிகின்றோமாயினும் அதன் தூய்மை அந்நபர் கொண்டுள்ள உள பரிசுத்தத்தில் தங்கியுள்ளது. தற்காலத்தில் சிலர் தமது சுய இலாபங்களுக்காகவும், புகழுக்காகவும், பெயருக்காகவும், சுயகுடும்ப நலத்திற்காகவும் சிலர் சமூகநலன் என்ற போர்வையில் வலம் வருவதாயும், தம்மை சமூகநலவாதிகள் எனவும் சூழுரைக்கின்றனர். இவை யதார்த்தத்தில் சமூகநலனே அல்ல என பிரசங்கத்தில் கூறப்பட்டது. சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினர்தான் சமூக நலண் காக்கவேண்டும், தனியுரிமை கொண்டாட வேண்டும் என இஸ்லாம் பணிக்கவில்லை. அது தூய்மையின் அடையாளமும் அல்ல. மாறாக, சமூகநலண் என்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதான கடமை.

எமக்கு நேர்ந்தால்தான், அல்லது எமது குடும்பத்தில் ஒருவனுக்கு நேர்ந்தால்தான் அது அநியாயம் எனும் போக்கு ஒட்டமொத்த முஸ்லிம் சமூகத்தையும் பாதிக்கின்ற செயல். எமது முஸ்லிம் சமூகத்தில் இடம்பெறுகின்ற அநாச்சாரங்களையும், அசிங்கங்களகயும், துர்காரியங்களையும், ஏமாற்று காரியங்களையும், இத்தகைய பித்தலாட்ட கும்பல்களையும் குறித்து புரிந்தும் புரியாதவர்களாயும், அறிந்தும் அறியாதவர்களாயும் மெளனியாக ஒரு கூட்டம் எம்மத்தியில் உள்ளனர் எனவும் அவர்களே எம்மத்தியல் 'ஊமைச் சாத்தான்களாக' வலம்வருகின்றனர் எனவும் குத்பா பிரசங்கம் குறிப்பிட்டு கூறியிருந்தது. 

இத்தகைய நிலமைகள் குறித்து ஒவ்வொரு முஸ்லிமும் விழிப்பாயிருக்க வேண்டும். இறைவனிடம் மேற்போந்த விடயங்கள் குறித்து நாம் பதிலளிக்காது சுவனத்தை நெருங்க முடியாது எனவும் வெற்றியாளர்களாக அன்றி யாரும் சுவனம் நுளைய முடியாது என அழுத்தி குறிப்பிட்டு குத்பா நிறைவுற்றது.

சூறத்துக்களை வைத்து மக்கள் மத்தியில் சூனியமாடும் நபர்கள் இஸ்லாம் கூறும் வெற்றியாளர்கள் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவை பற்றி அறிந்திருப்பின் அவர்களின் உளத்தூய்மை அவர்கள் செயல்களில் பிரகாசித்திருக்க வேண்டும்.
 

Browse