என்ன தியாகம்? எதற்கு இந்த திருநாள்?

Tuesday
12 September 2016

#குத்பா பிரசங்கம்#

முஸ்லிம்கள் என்பவர்கள் 'இறைவனுக்கு கட்டுப்பட்டவர்கள்'. இறைவனது கட்டளை எதுவித கோணல்களுமின்றி ஏற்று நடப்பவர்களே முஸ்லிம்களாக இருக்க முடியும்.

இத்திருநாளின் நோக்கமும் அதுதான். இத்திருநாள் 'தியாகத் திருநாள்' என பெயர் பெற்றது இறை தூதர் இப்றாஹிம் (ஆபிரகாம்) அவர்களின் வாழ்க்கையின் உன்னதங்களையும், இறைவன் மீதான அவரின்  கட்டுப்படுதலையும் இவ்வுலகில் காலம் முடிவுறும் வரையில்  நினைவில் நிறுத்தவாகும்.

இறைவன் மீது தூதர் இப்றாஹீம் அவர்கள் கொண்டிருந்த கட்டுப்படுதலையும், கீழ்ப் பணிதலையும் அவருடை வாழ்க்கை குறிப்புக்களில் ஏராளம் அவதானிக்கலாம்.

இறைதூதர் இப்றாஹிம் அவர்களின் இரு மனைவியரில் ஒருவர்தான் அன்னை ஹஜறா அவர்கள். இவர்கள் இருவருக்கும் பிறந்த புத்திரரே (அலை) இஸ்மாயில் (இஸ்மாவேல்) அவர்கள். புத்திரரான இஸ்மாயில் பாலகனாக இருந்த வேளை அவரையும் அன்னை ஹாஜறாவினையும் பக்கா என்கின்ற பாலைவன தேசத்தில் கூட்டிச் சென்று விட்டும்படி இறைவனின் கட்டளை தூதர் இப்றாஹிமுக்கு வந்தது.

இறைதூதர் அக்கட்டளையினை அப்படியே ஏற்றார். இறைவன் மீது எத்தகைய கேள்விகளையோ, சந்தேகங்களையோ அவர் விடுக்கவில்லை. அங்கு கூட்டிச் சென்று விட்டு வந்தவுடனும், அது இறை கட்டளை என்பதனால் அன்னை ஹஜறாவும் அவ்விடமே தான் மரணிக்கும் வரையில் தனது வாழ்நாளை தன்மகனிடன் கழித்தார்.

இங்கு இறைவனின் கட்டளைக்கு இறைதூதர் இப்றாஹீம் அவர்கள் கட்டுப்பட்டு நடந்தார்கள். தன் கணவனான இறைதூதர் இப்றாஹிமின் கட்டளைக்கு அன்னை ஹாஜறா அவர்கள் கட்டுப்பட்டு நடந்தார்கள். இஸ்லாமி வாழ்க்கை நெறியை  சுமப்பதில் கணவன் மனைவிக்கிடையில் எத்தகைய உறவு நிலை காணப்படவேண்டும், அவர்கள் எப்போது இறைவனின் திருப்தியை பெறலாம் என்பதே இங்கு படிப்பினைக்குரியது.

நபி இஸ்மாயில் (அலை) அவர்கள் பின்னர் பக்காவிலேயே வளர்கின்றார்கள். திருமணமும் செய்து கொள்கின்றார். பின்னரான காலத்தில் தூதர் இப்றாஹிம் அவர்கள் நபி இஸ்மாயில் அவர்களின் வீட்டுக்கு செல்கின்றார்கள். நபி இஸ்மாயில் அவர்கள் வீட்டில் இருக்கவில்லை. இருப்பினும் நபி இஸ்மாயில் அவர்களின் மனைவி தூதர் இப்றாஹிம் அவர்களை அதிருப்தியான வகையில் உபசரிக்கின்றார். தூதர் இப்றாஹிம் அவர்கள் நபி இஸ்மாயில் அவர்களின் மனைவியிடம் "வீட்டு வாசல் படியினை மாற்றிக்கொள்ளுமாறு" நபி இஸ்மாயிலுக்கு செய்தியை வைத்துவிட்டு அவ்விடம் அகலுகன்றார்கள்.

நபி இஸ்மாயில் அவர்கள் வீடு வந்ததும் இச்செய்தியை அவரின் மனைவி கூறுகின்றார். உடனே நபி இஸ்மாயில் அவர்கள் 'உன்னை பிரியுமாறு தன் தந்தை எனை பணித்துள்ளார்கள்' எனக் கூறி அக்கட்டளைக்கு கீழ்ப்படிந்தார்கள்.

ஒரு திருமண பந்தத்தில் பெற்றோரின் அபிலாசைகள் முக்கியத்துவம் வாய்ந்தது. பிள்ளைகள் திருமண பந்தத்திலும், குடும்ப வாழ்விலும் பெற்றோரின் அலோசனைகளுக்கு கீழ்ப்படிந்து தமது விருப்பு வெறுப்புக்களில் தியாகம் மேற்கொள்ள வேண்டும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகின்றது.

எனவே முஸ்லிமின் வாழ்விலும் முன்னேற்றத்திலும் கணவனுக்கும் மனைவிக்கும், தாய்க்கும் சேய்க்கும், தந்தைக்கும் புத்திரனுக்கும் இடையான உறவும், கீழ்ப்டிதலும் எந்நிலையில் இறை திருப்தியை பெறுகின்றது என்பது இங்கு உணரப்பட வேண்டியது. குடும்ப வாழ்வும், சகவாழ்வும் விட்டுக்கொடுப்பிலும், புரிந்துணர்விலும் பிறக்கின்றது என்பதும், புரிந்துணர்வு தியாகத்தில்தான் உண்டாகும் என்பதும் நபிகளார் இப்றாஹிம் அவர்களின் வாழ்க்கை நெறியில் கற்றுக்கொள்ளப்பட வேண்டியன.

0 comments:

 

Browse